தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பெண் தப்பினார் - காப்பாற்ற முயன்றவர் உயிரிழந்த சோகம்

எல்லை பாதுகாப்பு படைவீரர் கிணற்றில் குதித்து, தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளார்.

திருவண்ணாமலை,

கிணற்றில் விழுந்த மனநலம் பாதித்த பெண் தப்பிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீரர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (55 வயது) முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர், ஓய்வு பெற்றபின் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு பிரீத்தி, ஸ்வேதா என்ற 2 மகள்களும் நேதாஜி என்ற மகனும் உள்ளனர்.

கிணற்றில் விழுந்த பெண்

நேற்று முன்தினம் மாலை மருசூர் கிராமத்தைச் சேர்ந்த நண்பருடன், பரசுராமன் பயன்பாடு இல்லாத நிலத்தின் அருகாமையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த பரசுராமன் கிணற்றில் குதித்து தவறி விழுந்த பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளார்.

பிணமாக மீட்பு

இதனை பார்த்தவர்கள் அளித்த தகவலின்பேரில் ஊர் பொதுமக்கள் அங்கு வந்து கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர். அதற்குள் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் வீரர்கள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பரசுராமனை அவர்கள் பிணமாக மீட்டனர். அதே நேரத்தில் கிணற்றில் விழுந்த பெண் கரையோரம் அமர்ந்திருந்துள்ளார். அவரையும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

போலீசார் விசாரணை

அந்த பெண் மனநலம் பாதித்த பெண் என்பதும் அவரது பெயர் இந்திராணி என்பதும் தெரியவந்தது. படுகாயங்களுடன் இருந்த இந்திராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து பரசுராமன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT