தமிழக செய்திகள்

கத்தி முனையில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு: 3 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது

தூத்துக்குடியில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 சவரன் தங்கத் தாலிச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார்.

தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்தவர் சிவகமலா (வயது 48). இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளான். சிவகமலாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அந்த நபர், அவர் அணிந்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 7 சவரன் தங்கத் தாலிச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.

இந்த சம்பவம் குறித்து சிவகமலா சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அந்த சமயம் விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் பசும்பொன்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னை பழைய பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விடுமாறு கூறியுள்ளார்.

அந்த நபர் மீது சந்தேகம் கொண்ட பிரேம்குமார், சாமர்த்தியமாக அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டே சிப்காட் காவல் நிலையத்திற்கு ரகசியமாகத் தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை, தனிப்பிரிவு தலைமை காவலர் ராஜா மற்றும் சிறப்புப் படை காவலர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், சிவகமலாவிடம் பறிக்கப்பட்ட 7 சவரன் நகை இருப்பது உறுதி செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், பிடிபட்ட நபர் தென்காசி மாவட்டம், தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த பசுபதி மகன் சசிகுமார்(30) என்பது தெரியவந்தது. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடி டி.எம்.பி. காலனியில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவி மீனா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருவதும், சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகை பறிப்பு சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, பிரேம்குமார் மற்றும் போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் பாராட்டினர்.