தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு காலங்கரைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக அவரது மனைவி மருத்துவமனையில் தங்கியிருந்தார். அதே வார்டில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில், அந்த பெண்ணிடம் சென்ற போலீஸ் ஏட்டு, தனது செல்போனை சார்ஜ் செய்ய 'சார்ஜர்' உள்ளதா எனக் கேட்டுப் பேச்சுக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அந்த பெண்ணிற்கு அவர் மிரட்டலும் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீருடையில் இருந்த காவலரே மருத்துவமனையில் இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.