ஸ்ரீரங்கம்,
'முஸ்லிம் மத அடையாள உடையுடன் வந்த நபரை, எந்த அடிப்படையில் உள்ளே அனுமதித்தனர்' என, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில், பர்தா அணிந்த பெண் ஒருவர், கருட மண்டபம் வரை, நேற்று வந்து சென்றுள்ளார்.
இந்து சமய நம்பிக்கைகளுக்கு புறம்பான வழிபாட்டு முறைகளையும், சிலை வழிபாட்டுக்கு எதிரான கோட்பாடுகளையும் கொண்ட, பிற மதத்தை சேர்ந்த ஒரு பெண், எந்த நோக்கத்திற்காக கோவிலின் முக்கிய பகுதி வரை வந்தார் என்பது குறித்து, உடனடியாக காவல் துறை, கோவில் நிர்வாகம், விசாரணை நடத்த வேண்டும்.
கோவிலின் பாதுகாப்பு நுழைவாயிலில், காவல் துறையினரும், தனியார் பாதுகாப்பு ஊழியர்களும், பணியில் இருக்கும் போது, முஸ்லிம் மத அடையாள உடையுடன் வந்த நபரை, எந்த அடிப்படையில் உள்ளே அனுமதித்தனர் என்ற கேள்வி எழுகிறது.
பிற மதத்தை சேர்ந்தவர்கள், இந்து கோவில்களுக்குள் நுழைவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, உரிய வழிமுறைகளை வகுத்து தீர்ப்பளித்துள்ள நிலையிலும், இத்தகைய நிகழ்வு ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்து மத நம்பிக்கையும், வழிபாட்டில் ஈடுபாடும் கொண்டவர்கள் மட்டுமே, கோவில்களுக்குள் வர அனுமதிக்க வேண்டும். கேரள மாநில கோவில்களில் பின்பற்றப்படுவதை போல, பிற சமயத்தவர்கள் நுழைவதை கட்டுப்படுத்தும், சட்டப் பூர்வமான விதிகளை, தமிழகத்திலும், அற நிலையத்துறை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.