தமிழக செய்திகள்

37 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்ற பெண்

முதல் முயற்சியிலேயே 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை,

கோயம்புத்தூர் மா வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப் புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (37 வயது). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் தற்போது சேலத்தில் சட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகன் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு செல்கிறார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வள்ளியம்மாள் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது தந்தை இறந்ததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிப்பை பாதியில் விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து வள்ளியம்மாள் கூலி வேலை பார்த்துக் கொண்டே படிக்க தொடங்கினார். தொடர்ந்து 8-ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவரது முயற்சியை பலரும் பாராட்டினர். குழந்தைகளும் உறுதுணையாக இருந்தனர்.

இதையடுத்து வேலை பார்த்துக்கொண்டே 10-ம் வகுப்பு படித்தார். அவர் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் வள்ளியம்மாள் வெற்றி பெற்றார். அவர் தமிழ்-49, ஆங்கிலம்-53, கணிதம்-35, அறிவியல்-51, சமூக அறிவியல்-35 என மொத்தம் 223 மதிப்பெண்கள் பெற்றார்.

முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். தொடர்ந்து அவர் மேல்படிப்பு படிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். படிக்க வயது தடையில்லை என்று வள்ளியம்மாள் நிரூபித்துள்ளார்.