தமிழக செய்திகள்

சூட்கேஸில் பெண் சடலம்... 5 ஆண்டுகளாக தலைமறைவு! அடையாளத்தை மாற்றி இந்தியா திரும்பிய பெண் கைது

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை அடையாளம் கண்டனர்.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிப்பட்டி பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தேஜ்மண்டல் என்பவர், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி தனது வாடகை வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

பின்னர் அவரது உடல் பெரிய சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் சேலம் மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், தேஜ்மண்டலிடம் பணியாற்றிய வங்கதேசத்தைச் சேர்ந்த லப்லு, அவரது மனைவி நிஷி, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பெங்களூருவில் ஒரு வழக்கில் சிக்கிய லப்லு மற்றும் நிஷிக்கு தேஜ்மண்டல் உதவ மறுத்ததாகவும், அவர்கள் வேலை செய்ததற்கான சம்பளத்தை முறையாக வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை

மேலும், நிஷியுடன் தேஜ்மண்டலுக்கு இருந்ததாக கூறப்படும் தவறான உறவு மற்றும் சம்பள பாக்கி தொடர்பான பிரச்சினையால் ஆத்திரமடைந்த லப்லு-நிஷி தம்பதி, தேஜ்மண்டலை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திட்டமிட்டபடி 4 பேரும் சேர்ந்து தேஜ்மண்டலை பிடித்து, சேலையால் அவரது கை, கால்களை கட்டியதுடன், வாயில் துணியை திணித்து மூச்சுத்திணறச் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு, நகை மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை அடையாளம் கண்டனர். ஆனால் அவர்கள் பெங்களூரு வழியாக வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கடந்த 5 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிஷி, தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் இந்தியாவுக்குள் ரகசியமாக வந்ததாக கூறப்படுகிறது. புனேவில் தங்கியிருந்த அவர், கர்நாடகாவைச் சேர்ந்த பரசுராம் நாடார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு, பெண் குழந்தையுடன் குடும்பம் நடத்தி வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ரகசிய தகவலின் அடிப்படையில் புனே சென்று நிஷியை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் நிஷியை சேலத்திற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நிஷி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள லப்லு, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய 3 பேரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT