தமிழக செய்திகள்

ரெயிலில் பெண்ணின் சடலம்... பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம்

சிசிடிவி காட்சிகளை வைத்து வாலிபர் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ரெயில் நிலைய யார்டில் நின்ற ரெயில் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

பயணிகள் ரெயில்

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களில் இருந்து ரெயில்கள் வந்தடைந்ததும், அடுத்த பயணத்திற்காக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 11-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்வதற்காக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன் தினம் பகல் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு புறப்படும் பயணிகள் ரெயிலில் இணைப்பதற்காக ஏற்கனவே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளை தயார் செய்யும் பணி நடந்தது.

அழுகிய நிலையில் பிணம்

அப்போது ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பெட்டிக்குள் ஏறி சோதனை செய்தபோது அந்த பெட்டியில் இருக்கைக்கு கீழ் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுபற்றி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சடலமாக கிடந்தது பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை?. ரெயிலில் பயணம் செய்து வந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. எனவே சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில், ரெயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகப்படும் படியான வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக ரெயில் பெட்டிக்குள் வைத்து அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றுவிட்டு, உடலை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு தப்பியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரை கைதுசெய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையான பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயிலில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT