தமிழக செய்திகள்

ரெயில் பெட்டியில் பெண் சடலம் மீட்பு: பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது

நாகர்கோவிலில் ரெயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், ரெயில்வே போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், அப்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

ரெயில் பெட்டியில் பெண் சடலம் மீட்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்குக் கடந்த 11-ம் தேதி வந்த பயணிகள் ரெயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக, பராமரிப்புப் பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பராமரிப்புப் பணிகள் முடிந்து கடந்த 18-ம் தேதி கோட்டயத்திற்கு இயக்கத் தயாரானபோது, ரெயில் பெட்டிகளைச் சுத்தம் செய்த ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பெண் அடித்து கொலை

பெண்ணின் உடலைக் கைப்பற்றிய ரெயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அப்பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததும், விலா எலும்பு மற்றும் இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் அப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த வாலிபர்

இக்கொலை குறித்து துப்பு துலக்க நாகர்கோவில் சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரம் மற்றும் யார்டு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கடந்த 13-ம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் சுற்றித் திரிந்ததும், மறுநாள் (14-ம் தேதி) காலை 8 மணியளவில் அந்த ரெயில் பெட்டியிலிருந்து இறங்கிச் சென்றதும் பதிவாகியிருந்தது.

வாலிபர் கைது

அந்த உருவத்தை வைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார், நேற்று (நவம்பர் 20) நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்த கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் அய்யப்பன் (வயது 31) என்ற தொழிலாளியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அய்யப்பன் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:

திருமணமாகாத அய்யப்பன் வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரங்களில் ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 13-ம் தேதி இரவு யார்டு பகுதியில் டீ-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து நடந்து சென்ற அப்பெண்ணை வழிமறித்த அய்யப்பன், அவரிடம் அத்துமீறியுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அப்பெண் சத்தம் போடவே, அவரை சரமாரியாக தாக்கி மயக்கமடையச் செய்து, தரதரவென இழுத்துச் சென்று மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் சுதாரித்து எழ முயன்றபோதெல்லாம் மீண்டும் மீண்டும் கொடூரமாகத் தாக்கி, இறுதியில் அவரைக் கொலை செய்து சடலத்தை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு மறுநாள் காலை தப்பிச் சென்றுள்ளார்.

ரெயில்வே போலீசார் விசாரணை

குற்றவாளி சிக்கிய நிலையிலும், கொல்லப்பட்ட பெண் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. கடந்த 13-ம் தேதி இரவு தண்டவாளப் பகுதியில் அப்பெண் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியிருந்தாலும், முகம் தெளிவாகத் தெரியவில்லை.

அப்பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் காணாமல் போன பெண்களின் விவரங்களைச் சேகரித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இச்சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சாரி, நெல்லை கோட்ட டி.எஸ்.பி. லட்சுமணன் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT