சென்னை,
எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவில் இந்தக் கல்வி ஆண்டுக்கான, இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு உறுப்பினர்களாக, ஒளிப்பதிவாளர்கள் வேல்ராஜ், விஜய் மில்டன், இயக்குநர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, பேரரசு உள்ளிட்ட பத்து திரைத்துறை பிரபலங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்கூட இடம்பெறவில்லை என்பதை திமுக எம்.பி. கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை.
பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.