தமிழக செய்திகள்

பெண்களை தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பாலியல் தொல்லை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல!

முதல்-அமைச்சர் என்ன செய்தார்?

அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்-அமைச்சராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய அரசின் முதல்-அமைச்சர் என்ன செய்தார்?

9-5 Desk Job போல முதல்-அமைச்சர் பணியை பார்க்கும் இன்றைய முதல்-அமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா?

கடுமையான நடவடிக்கை..

இதில், இன்றைய முதல்-அமைச்சர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.

இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.