சென்னை,
சென்னையின் முக்கிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
அதன்படி, ரெயில் நிலைய வளாகத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி, பார்சல் அலுவலகம், நுழைவுவாயில், ரெயில்வே ஊழியர்கள் அறை உள்பட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதேபோல, எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகளும், மின்சார ரெயில் நடைமேடை 10, 11 ஆகியவற்றிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை குறிப்பிட்ட தேதிகளுக்குள் முடிக்கும் வகையில், 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாகப் பணியமர்த்தபட்டனர். தற்போது, தண்டவாளங்கள் மறுசீரமைப்பு, நடைமேடையில் கூடுதல் வசதி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தநிலையில், ரெயில் இயக்க தொடங்குவதற்கான அனைத்து இறுதிகட்ட பணிகளும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதாவது, நடைமேடையை சுத்தம் செய்தல், நகரும் படிக்கட்டு இயக்கி பார்ப்பது, தண்டவாளங்களுக்கு கிரீஸ் தடவும் பணி, பயணிகள் அறிவிப்பு பலகை அமைப்பது, மின் அழுத்த வயர்களை சரிசெய்தல் உள்பட அனைத்து பணிகளும் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, எழும்பூர் ரெயில் நிலைய பழைய நடைமேடையில் இருந்து விரைவில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “எழும் பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கும் வகையிலான அனைத்து முக்கிய பணிகளும் நிறைவடைந்துவிட்டது. சிறு சிறு பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவடையும். இன்று (புதன்கிழமை) முதல் 5-ந்தேதிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த நடைமேடையில் இருந்து புறநகர் மின்சார ரெயில் சேவைகளை தொடங்கலாம். ரெயில்களை இயக்க தொடங்கிய பின்பும், இதில் மேற்கொள்ள வேண்டிய எஞ்சிய பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதனால் பயணிகள் மற்றும் ரெயில் சேவைக்கு எந்த இடையூறும் இருக்காது” என்று தெரிவித்தார்.