மதுரை,
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் அம்மனும்-சுவாமியும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகையில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்து காணப்படுகிறது. போதுமான நீர் இருப்பு இல்லாததால் மதுரை சித்திரை திருவிழாவுக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சூழலில் வைகை அணையில் இருந்து முல்லைப்பெரியாறு பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக மதுரை கொண்டு செல்லப்படும் தண்ணீர், முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் தேக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த திட்டத்தில் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை என்றால், மாற்று ஏற்பாடாக மதுரை கொண்டமாரி ஓடை வழியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி வீதம், வருகிற 29-ந்தேதி வரை 6 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அம்மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.