சென்னை,
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக சிலிண்டருக்கு பெரிய அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் பல வீடுகளுக்கு சிலிண்டர் சரியாக கிடைப்பது இல்லை. சிலிண்டர் இல்லாத நிலையில், பலர் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்புக்கும் மாறுகிறார்கள்.
குழாய் மூலம் கியாஸ் இணைப்பு (பி.என்.ஜி.) என்பது பூமிக்கடியில் குழாய்கள் வழியாக வீடுகளுக்கு நேரடியாக சமையல் கியாஸ் வழங்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான வசதியாகும். சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, முக்கிய நகரங்களில் உள்ள வீடுகள் 3 மாதங்களுக்குள் இந்த வசதிக்கு மாற மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
குழாய்வழி இயற்கை கியாஸ் இணைப்பு என்பது, ஒரு குழாய் மூலம் வீட்டிற்கு நேரடியாக இயற்கை கியாசை வழங்குகிறது. இது பொதுவாக சமையலறை அடுப்புகள் மற்றும் வெப்பமூட்டும் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வீட்டு சமையல் பயன்பாடுகளுக்கு ஏற்ற கட்டுப்படுத்தப்பட்ட அழுத்தத்தை வழங்குகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும் கியாஸ் வினியோகம் செய்யப்படுவதுடன், சிலிண்டர் முன் பதிவு செய்யப்பட்டு காத்திருக்க வேண்டியதில்லை.
வீடுகளுக்கு குறைந்த அழுத்தத்தில் கியாஸ் வினியோகிக்கப்படுவதால் பாதுகாப்பானது. அதேபோல், பயன்படுத்திய கியாசுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் உள்ளிட்ட பல்வேறு பயன்களும் இருந்து வருகிறது. காற்றை விட லேசானது மற்றும் கசிவு ஏற்பட்டால் விரைவாக காற்றில் பரவிவிடும். இதனால் எந்த ஆபத்தும் ஏற்படவாய்ப்பில்லை. பல குடியிருப்பாளர்கள் ஒன்றாக விண்ணப்பிக்கும்போது குழாய் பதிப்பது எளிதாகிறது.
விண்ணப்பம் செய்வது குறித்து மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வசதி சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப் புகள், வாடகைதாரர்கள், வணிக நிறுவனங்கள் (உணவகங்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள்), தொழில்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன்பு அந்தந்தப் பகுதிகளில் குழாய் கியாஸ் இணைப்பு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்தந்த பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட குழாய் கியாஸ் இணைப்பு நிறுவனத்திற்கு பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் பதிவுக் கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் அட்டை அல்லது பிற அடையாளச் சான்று, முகவரிச் சான்று (மின்சாரக் கட்டண ரசீது, சொத்து ஆவணங்கள் அல்லது வாடகை ஒப் பந்தம்), பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், உரிமை அல்லது குத்த கைச் சான்று உடன், பெயர், தொடர்பு எண், முகவரி, இணைப்பின் வகை (வீட்டு உபயோகம், தொழில் அல்லது வணிகம்), விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் வழிகாட்டுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் விண்ணப்பதாரரைத் தொடர்பு கொள்வார்கள் என்றனர்.
இதுகுறித்து நகர கியாஸ் வினியோக நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர்.பிரசாத் கூறியதாவது:- சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் டோரண்ட் கியாஸ் நிறுவனம் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி குழாய் பதித்து 5 ஆயிரம் பொதுமக்களுக்கு சமையல் கியாஸ் வினியோகம் செய்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், முகப்பேர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு. திருமங்கலம், அண்ணாநகர், கோயம் பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.