தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மேல ஒட்டங்காடு காந்தி ரோடு பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன் (60 வயது). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. தினக்கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மகள் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். மகன் மணிகண்டன் (29 வயது). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தந்தை சுப்பிரமணியனும், மகன் மணிகண்டனும் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தனது தந்தையை தாக்கி விட்டு மணிகண்டன் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
நள்ளிரவு நேரத்தில் மணிகண்டன் மீண்டும் வீட்டுக்கு வந்து அயர்ந்து தூங்கி உள்ளார். தன்னை தாக்கியதால் மகன் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த சுப்பிரமணியன், தேங்காய் உரிக்கும் இரும்பு கம்பியால் மணிகண்டனின் தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் சரமாரியமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் துடி, துடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் மகனை, தந்தையே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.