தமிழக செய்திகள்

25 பவுன் நகையை மறைத்து வைத்து திருட்டு என நாடகமாடிய தொழிலாளி கைது

நகை மாயமான வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் அந்த வீட்டையே சுற்றி, சுற்றி வந்தது.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து திருப்புவனம் சென்றிருந்தார். அவருடைய மனைவி பூர்ணவள்ளி சந்தைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்துபோது கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கிலி, பழையனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நகை

போலீஸ் மோப்ப நாய் லைலா, நகை மாயமான வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் அந்த வீட்டையே சுற்றி, சுற்றி வந்தது. இது போலீசாருக்கு முக்கிய துப்பாக அமைந்தது. அதன்பேரில் கணவன், மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பூர்ணவள்ளி பழையனூர் போலீசாருக்கு செல்போனில். தனது கணவர்தான் நகைகளை மறைத்து வைத்துள்ளதாக தகவல் கொடுத்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள வைக்கோல் படப்புக்குள் மறைத்து வைத்திருந்த 25 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் சங்கிலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த வீட்டிலேயே நகையை திருடி மறைத்து வைத்துவிட்டு திருட்டுபோனதாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.