தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தாளவாடி அடுத்த காளிதிம்பம் பகுதியைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் இந்த பணியில்ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 55 வயதுள்ள பெண் ஒருவர் அங்குள்ள மானாவாரி நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்த காளிதிம்பத்தை சேர்ந்த ரங்கநாதன் (வயது 25) மதுபோதையில் அங்கு சென்று, மாடுமேய்த்துக்கொண்டு இருந்து பெண்ணை கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ரங்கநாதனின் கையை கடித்தார். மேலும் அபயக்குரல் எழுப்பி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ரங்கநாதன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். இதையடுத்து ரங்கநாதன் கீழே தள்ளியதில் காயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தாளவாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரங்கநாதனை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை ஊருக்குள் பதுங்கி இருந்த ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.