தமிழக செய்திகள்

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த பணிக்கர்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த கொடுமை குறித்து குழந்தைகள் உதவி மையத்திற்கு (Childline) ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறுமியிடமும், அந்தப் பகுதியிலும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஜெயமுருகனைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.