சேலம்,
குடும்பத் தகராறில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து காட்டுக்குள் புதைத்த மனைவி, மகன், மாமனாா், மைத்துனர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 44). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பழனியம்மாள்(வயது 40). இவர்களுக்கு முருகன்(வயது 21) என்ற ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் பழனியம்மாள் கோபம் அடைந்து மகனை அழைத்துக் கொண்டு அதே கிராமத்தை சேர்ந்த தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
இதுதொடர்பாக கோவிந்தராஜுக்கும் மாமனார் மாணிக்கத்திற்கும் (65) சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ், நாட்டுத் துப்பாக்கியால் மாமனாரை சுட்டு காயப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பிணையில் வெளியே வந்தார். இதையடுத்து, வாழப்பாடி மங்கம்மா சாலை பகுதியில் தங்கி விஜய் என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் மகனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இருவரும் வர மறுத்ததால் மனைவியை கோவிந்தராஜ் தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பழனியம்மாள், அவரது மகன், தந்தை மற்றும் சகோதரர் பெரியசாமி (வயது 39) ஆகிய 4 பேரும் கோவிந்தராஜை சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று அவரது உடலை புதைத்தனர்.
இந்த நிலையில், சொந்த கிராமத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற கோவிந்தராஜ் மீண்டும் வேலைக்கு வராததால் சந்தேகம் அடைந்த வாழப்பாடி தோட்ட உரிமையாளர் விஜய், இது குறித்து கடந்த 23-ந்தேதி ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் அவரது மனைவி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோவிந்தராஜை அவரது மனைவி, மகன், மாமனார், மைத்துனர் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்து காட்டுக்குள் புதைத்தது அம்பலமானது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி நெய்யமலை வனப்பகுதியில் புதைத்து வைத்த கோவிந்தராஜின் உடலை தோண்டி எடுத்த பிரேத பரிசோதனை செய்து முடித்து அவரது உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.