திண்டிவனம்,
திண்டிவனம் அருகே முயல் வேட்டைக்கு வந்தபோது மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார். போலீசுக்கு பயந்து அவரது உடலை ஏரியில் வீசிய வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்தவர் அழகேசன்(வயது 70). இவருக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்சிவிரி கிராமத்தில் விளைநிலம் உள்ளது. இதில் தைல மரம், மணிலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது மற்றும் பராமரிப்பு பணிகளை மேல்சிவிரியை சேர்ந்த சங்கர்(56) என்பவர் செய்து வந்தார். காட்டுப்பன்றிகளிடம் இருந்து மணிலா பயிரை காப்பாற்றுவதற்காக நிலத்தை சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கூடலூர் ஊராட்சி ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பச்சையப்பன் (37) என்பவர், முயல், நண்டுகளை பிடிக்க மேல்சிவிரிக்கு வந்தார். அப்போது விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த சமயத்தில் வயலுக்கு வந்த சங்கர், மின்வேலியில் சிக்கி பச்சையப்பன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், போலீசுக்கு பயந்து பச்சையப்பனின் உடலை தூக்கிக்கொண்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆத்திபாக்கம் கிராம ஏரியில் வீசிவிட்டு சென்றார்.
ஏரியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்ததை பார்த்த மக்கள், இதுபற்றி வெள்ளிமேடுபேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பச்சையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆத்திப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி ராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முயல் வேட்டைக்கு வந்த கூலி தொழிலாளி பச்சையப்பன் மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததும், போலீசுக்கு பயந்துபோய் அவருடைய உடலை ஏரியில் வீசியதும் தெரியவந்தது.
இதையடுத்து அழகேசன், சங்கர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சங்கர் கைது செய்யப்பட்டார். மின்வேலியில் சிக்கி பலியான பச்சையப்பனுக்கு அய்யம்மாள் (35) என்ற மனைவியும், ராஜமாணிக்கம் (7), ஜீவா (4). ராஜேஷ் (2) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.