தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அயன்பொம்மையாபுரம், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமன் மகன் கோவிந்தராஜ் (வயது 38), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள பால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கோவிந்தராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தனது வீட்டின் மாடியில் தூங்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.