தமிழக செய்திகள்

மதுபோதையில் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை பாலத்தின் கீழ், கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை பாலத்தின் கீழ், கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சடலம் சாக்கடைக்குள் சிக்கியிருந்ததால், அதனை மீட்க தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சடலத்தை வெளியே எடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி ராஜீவ்நகர் 5-வது தெருவை சேர்ந்த செல்வம் (வயது 45) என்பது தெரியவந்தது.

இவர் எப்.சி.ஐ. குடோனில் மூடை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்த பிறகு, செல்வம் பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது போதை அதிகமாகி நிலைதடுமாறிய அவர், எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மறைவு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.