திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லடம் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத் தம்பதியரிடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த ராமகிருஷ்ண மோண்டல் என்ற வடமாநிலத் தொழிலாளி, உதவி செய்வதாக கூறி அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லாமல், அருகில் இருந்த காட்டு பகுதிக்கு கொண்டு சென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த அந்த பெண், அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்று தனது கணவரிடம் விபரத்தைக் கூறியுள்ளார்.
இது குறித்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில், அவிநாசிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ண மோண்டலைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.