தமிழக செய்திகள்

திருவள்ளூரில் தொழிலாளி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பைக்கில் சென்ற தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொழிலாளி வெட்டிக்கொலை

ஆவடியை அடுத்த பொத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). கூலி தொழிலாளியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு மீனா(35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று மாலை சதீஷ், தனது பைக்கில் ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் உள்ள ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், சதீசை வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீசை வெட்டியதுடன், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாலும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்விரோதம் காரணமா?

இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மேலும் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.