கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மெட்டுக்கல் கிராமத்தை சேர்ந்த காளன் என்பவரது மகன் குமார் (வயது 44) தொழிலாளி. பழங்குடியினரான இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் குமார் கொப்பையூர் கிராமத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டி ருந்தார்.
அப்போது மெட்டுக்கல் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை ஒன்று குமாரை தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு வெகு நேரமாகியும் குமார் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் நேற்று காலை அவரை தேடி பார்த்தனர்.
அப்போது தேயிலை தோட்ட பகுதியில் குமார் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோலூர்மட்டம் போலீசார் மற்றும் கீழ் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், வனத்துறையினர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்கு தாக்குதலால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு வழங்கும் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்த மாதம் கடந்த 12-ந் தேதி மசினகுடியை சேர்ந்த பூசாரி ராஜப்பன் (40). கோத்தகிரி அருகே தாளமொக்கையை சேர்ந்த ரகு (28), 26-ந் தேதி பந்தலூர் புத்தூர் வயலை சேர்ந்த மிஸ்ஹாப் (14) ஆகியோர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். இதன் மூலம் நீலகிரியில் ஒரே மாதத்தில் காட்டு யானை தாக்கி 4 பேர் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.