தமிழக செய்திகள்

காப்பு காட்டிற்கு புளி சேகரிக்க சென்ற தொழிலாளி சிறுத்தை தாக்கி உயிரிழப்பு

வனத்துறையினர் மலை கிராம மக்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருட்ட தொடங்கியதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மூன்று குட்டை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 62). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோப்பனாரி கிழக்கு பீட் மூன்று குட்டை காப்பு காட்டிற்கு புளி சேகரிக்க சென்று உள்ளார். எப்போதும் மாலை 4 மணிக்கு காட்டை விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மலை கிராம மக்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருட்ட தொடங்கியதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று காலை வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் காணாமல் போன வெள்ளியகிரியை தேடும் பணியில்யில் ஈடுபட்டனர்.

அப்போது பகல் 1 மணிக்கு மூன்று குட்டை காப்பு காட்டில் உடல் மிகவும் சிதைந்த நிலையில் மாயமான வெள்ளியங்கிரி பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுத்தை தாக்கி அவரது உடலை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று உடல் பகுதி முழுவதும் தின்றுவிட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றதாக தெரிகிறது.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் காரமடை போலீசார் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் மனோஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைக்க பெற்றதும் என். சுனில் ஆனந்த் எம். எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்றார். மலை கிராம மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து உடனே அவர் மாவட்ட வன அலுவலரோடு செல்போனில் தொடர்பு கொண்டு கிராம மக்களின் அச்சத்தை போக்க சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிறுத்தை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.