நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அடுத்த அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் செம்பன் (65). அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் விஷ்ணு (40). இவர்கள் இருவரும் இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த காட்டுயானை திடீரென இருவரையும் விரட்டி தாக்கியது. இதில் செம்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர் விஷ்ணு அங்கிருந்து தப்பியோடி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காயமடைந்த விஷ்ணுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.