தமிழக செய்திகள்

வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை - 29 நாட்களில் நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

நெல்லையில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான தொழிலாளி ஒருவர் தனது 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அறிந்த தொழிலாளியின் மனைவி, நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா விசாரணை நடத்தி, கடந்த மாதம் 12-ந்தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தார்.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.

இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 29 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மகளிர் போலீசாரின் வேகமான நடவடிக்கையாக 5 நாட்களிலேயே குற்றப்பத்திரிகை தயார் செய்து கோட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டில் 6-வது நாளில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. 5 வேலை நாட்களில் கோர்ட்டில் விசாரணை முழுமையாக முடிவடைந்துள்ளது.

SCROLL FOR NEXT