கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு: விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்துக - வைகோ

ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொழிலாளர்கள் உயிர் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.

இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொது நல அமைப்பினர் பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு மற்றும் ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொழிலாளர்கள் உயிர் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவை அமைத்து 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாள்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு சட்டபூர்வ நட்ட ஈடு தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து, அவர்களது உயிரைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.