நெல்லை,
வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் பஞ்சாயத்து தலைவரை செங்கல்லால் அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தாமரைக் குளத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 68). இவர் வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (40). தொழிலாளி. அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, இசக்கியப்பன் வீட்டுக்கு மட்டும் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இசக்கியப்பன் நேற்று மாலையில் பஞ்சாயத்து தலைவர் மகாராஜனின் வீட்டுக்கு சென்று முறையிட்டார். அப்போது இசக்கியப்பனுக்கும், மகாராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இசக்கியப்பன், அங்கு வீடு கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கலை எடுத்து மகாராஜன் மீது வீசினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மகாராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனே இசக்கியப்பன் தப்பி சென்று விட்டார்.
பலத்த காயமடைந்த மகாராஜனை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இசக்கியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.