சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டம் சார்பில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நிறைவடைந்தது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய நிகழ்வாக, ஜோலார்பேட்டை ரெயில்வே காலனி உள்பட சென்னை கோட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோல், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஊழியர்கள் மற்றும் பயணிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், பயணிகளுக்கு ரெயில்வே பாதுபாப்பு படையினர் சணல் பைகள் வழங்கினர்.
கடந்த மே 15-ந்தேதி முதல் ஜூன் 5-ந்தேதி வரை நடைபெற்ற இந்த இயக்கத்தில், 131 விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் 1,300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த தீவிர தூய்மைப்பணியின் மூலம் சென்னை கோட்டத்தில் 16 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பாக அகற்றப்பட்டன. இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் மற்றும் காட்பாடி ரெயில் நிலையத்தில் பாரத சாரணர்-சாரணியர் படையினர் கலந்துகொண்டு பணிகளை மேற்கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.