ராமேஸ்வரம்,
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள துர்வா பகுதியை சேர்ந்த இஷாங்க் சிங் (7), இளம் வயதிலேயே நீச்சல் பயிற்சி பெற்று, பல போட்டிகளில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தான். இந்நிலையில் ஆபத்து நிறைந்த பால்க் நீரிணையை நீந்தி கடப்பதற்காக துர்வா அணையில் தீவிர பயிற்சி மேற்கொண்டான்.
பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில், இருள் சூழ்ந்த நேரத்தில், இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியிலிருந்து பால்க் நீரிணையில் இஷாங்க் தனது நீச்சல் சாதனை பயணத்தைத் தொடங்கினான். நடுக்கடலில் ஆக்ரோஷமான அலைகள், கடும் நீரோட்டம் எனப் பல தடைகள் இருந்தன.
இஷாங்க் எதற்கும் அஞ்சாமல் விடாமுயற்சியுடன் நீந்தினான். சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து, மதியம் 1.50 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடியை வந்தடைந்தான்.
இஷாங்கின் இந்த சாதனையை அங்கீகரித்து யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் போரம் (URF) உலக சாதனை சான்றிதழை வழங்கியது. மிகக் குறைந்த வயதில் பால்க் நீரிணையை நீந்திக் கடந்த முதல் சிறுவன் என்ற பெருமையை இஷாங்க் பெற்றான்.