சென்னை,
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என பலரும் என்னிடம் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே போட்டியிடுகிறேன். நாம் தேர்தலில் போட்டியிடுவதில் தலைவர்களையும், இயக்கங்களையும் சார்ந்து இல்லை. என்னை ஒரு தடவையாவது சட்டசபைக்கு அனுப்பிப் பாருங்கள். சட்டசபையில் எப்படி வேலை செய்வது என்று காட்டுவேன். அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற்றால் அதனை தமிழ்நாட்டின் தலைசிறந்த தொகுதியாக மாற்றுவேன். என்று அவர் கூறினார்.
திமுக மற்றும் அதிமுக ஆதரவு குறித்த கேள்விக்கு, “பசியுடன் இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லப்போவது இல்லை. விமர்சனம் என்பது அரசியல் நிலைப்பாடு. அரசியல் கொள்கை நிலைப்பாடு என்பது வேறு” எனக் கூறினார்.
சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு, “தேர்தல் அறிவிக்கட்டும். அதன்பிறகு பேசலாம்” என்று மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இது தொடர்பான கேள்விக்கு, “இடைத்தேர்தலில் ஆதரவளிப்பதை கூட்டணியாகப் பார்க்கக் கூடாது. திமுகவும் அதிமுகவும் என்னை பொதுவேட்பாளராக நிறுத்தும் என்று இரு கட்சிகளும் முடிவெடுக்கவில்லை. ஆனால், இதனை தவெகவினர்தான் பரப்பி வருகின்றனர். நாங்கள் பொதுவேட்பாளர்கள்தான்” என சீமான் கூறினார்.