தமிழக செய்திகள்

நூல் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தால் கோவை, திருப்பூரில் தினமும் ரூ.50 லட்சம் இழப்பு

நூல் உற்பத்தியாளர்கள் நேற்று முதல் 50 சதவீத உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

கோவை,

கடந்த 3 வாரங்களாக நூல் விலை கிலோவுக்கு ரூ.30 வீதம் அதாவது 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை நேரடியாக துணியின் மீது வைக்க இயலவில்லை. இதனால், ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தேக்கமடைந்துள்ளன. இதனால் விசைத்தறி கூடங்களுக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் நூல் உற்பத்தியாளர்கள் நேற்று முதல் 50 சதவீத உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

கோவை மாவட்டத்தில் சோமனூர், அன்னூர் ஆகிய பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் இச்சிப்பட்டி, பல்லடம், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த போராட்டத்தின் காரணமாக பாவு மற்றும் நூல் பை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டன.

இது தொடர்பாக போராட்டக்காரர்கள் கூறியதாவது:- தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான் பகுதி நேரம் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படும் நிலையில், இது பாதியாக குறைக்கப்படும். நல்ல பஞ்சு கிலோ ரூ.160-க்கு விற்கப்படும் நிலையில், கழிவுப்பஞ்சு ரூ.130 வரை விற்கப்படுவது ஏற்புடையது அல்ல.

கழிவுப் பஞ்சு விலையால் நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால் எங்கள் தொழில் முழுமையாக பாதிப்பை சந்திக்கிறது. ஆகவே நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தியே எங்கள் போராட்டம் தொடர்கிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் தினமும் ரூ.25 லட்சமும், திருப்பூர் மாவட்டத்தில் தினமும் ரூ.25 லட்சமும் என மொத்தம் ரூ.50 லட்சம் உற்பத்தி இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.