தமிழக செய்திகள்

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு... தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு

10-ம் நம்பர் கோம்டு நூல் கிலோவுக்கு ரூ.224 என விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர்,

திருப்பூரின் ஆயத்த ஆடை உற்பத்தியில் பருத்தி நூல் முக்கிய பங்காற்றுகிறது. பருத்தி விலை அவ்வப்போது மாறுதல் அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் நூல் விலை உயர்ந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் பருத்தி இறக்குமதி வரி விலக்கு நிறைவடைந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கப்பட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு பருத்தியும் கேண்டி ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரத்து 500 வரை விலை உயர்ந்தது.

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் நூல்விலை ரூ.7 ? உயர்ந்தது. இதேபோல் மார்ச் மாதமும் விலை உயர்த்தப்பட் டது. கடந்த ஏப்ரல் 1-ந்தேதி ரூ.10 விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை கிலோவுக்கு ரூ.34 வரை நூல் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்த மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளன.இதன்படி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.7 விலை உயர்த்தப்பட்டுள்ளது. தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் பஞ்சு கேண்டி விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வை தொடர்ந்து 10-ம் நம்பர் கோம்டு நூல் கிலோவுக்கு ரூ.224 எனவும், 16-ம் நம்பர் ரூ.234, 20-ம் நம்பர் நூல் ரூ.292, 30-ம் நம்பர் ரூ.314, 34-ம் நம்பர் 334, 40-ம் நம்பர் ரூ.352 எனவும், 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.289, 24-ம் நம்பர் ரூ.297, 30-ம் நம்பர் ரூ.323, 40-ம் நம்பர் 342-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.