சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. வி.சி.க. சார்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, த.வெ.க.விடம் இருந்து தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்போம் எனவும் ஐ.யூ.எம்.எல். திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஐ.யூ.எம்.எல். கட்சியின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!!” என்று குறிப்பிட்டு தி.மு.க.வுடனான தங்கள் கூட்டணி தொடர்வதை அக்கட்சி மீண்டும் உறுதி செய்துள்ளது.