தமிழக செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் விருது பெற நவம்பர் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

2026-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

சென்னை,

2026-27-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் விருது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக இணைத்துக்கொண்டு, சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் ஆற்றிவரும் அறிய தொண்டினை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று “டாக்டர் அம்பேத்கர் விருது" தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.

அவ்வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை.

1. தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில் "https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ==" என்ற இணைப்பை (Link) கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2. ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகம், சேப்பாக்கம் சென்னை-600 005-ல் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

3. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி விருதினை பெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தாங்கள் ஆற்றியுள்ள அரிய தொண்டுகள், சாதனைகள் மற்றும் அதற்கான உரிய ஆவணங்கள்/சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் 30.11.2026. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை/ஒப்புதலுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT