சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் (கார்) வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டசபையில் அவர் பேசுகையில், “தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அதனால், அரசு அறிவித்த காரினை திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் எடுத்துள்ளோம். நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட கோப்பை சமர்பித்துள்ளேன். தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி அறிவிப்புக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், “வி.சி.க.வை சேர்ந்த ஏழ்மையான சட்டமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையால் தான் முதல்-அமைச்சர் கார் வழங்குவதாக கூறினார். ஏழ்மையான உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட்டது. எதிர்கட்சி தலைவருக்கு 3 வீடுகள் இருக்கிறது, ஏன் அரசு பங்களாவில் இருக்கிறார்? அவருக்கு பங்களா இருப்பதால், தர முடியாது என்று சொல்ல முடியுமா?
நீங்கள் வேட்பு மனுவில், கார் இல்லை, வீடு இல்லை, கையில் ரூ.10 ஆயிரம் இருப்பதாக கூறலாம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் வீடு, கார் இல்லாமல் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் உறுப்பினரிடம் கார் இல்லை. முதல்-அமைச்சர் பொதுவாக தான் அறிவிப்பு கொடுத்தார். ஏற்கனவே கார் வைத்திருக்கும் த.வெ.க.வினர், கார் கேட்டு விண்ணப்பிக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.என்.நேரு பதில் அளிக்கையில், “கார் வேண்டாம் என்று தான் சொல்கிறோம், அரசுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதால் சொல்கிறோம். எங்கள் வேட்புமனுவை குறிப்பிட்டு பேசினால், வேண்டுமானால் வழக்கு போடுங்கள். அமைச்சர் சொந்த வீட்டில் இருக்கிறார், ஆனால் அவர் வீட்டுக்கு அரசு வாடகை செலுத்துகிறது. வீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்.
இதுதொடர்பாக பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில், “பா.ம.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வேண்டும் என்பது உண்மை தான். என்னிடம் கார் உள்ளது. யாருக்கு கார் தேவையோ அவர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்பது எங்களின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிபிஐ எம்எல்ஏ இராமச்சந்திரன் கூறுகையில், “"சில சட்டமன்ற உறுப்பினர்கள் கார் கேட்டு கோரிக்கை வைத்தார்கள். முதல்-அமைச்சர், அவர்களுக்கு கொடுக்கட்டும், பிரச்சினை இல்லை. இருந்தாலும், கார் தேவையில்லை என்பது எங்களின் நிலைப்பாடு" என்று தெரிவித்தார்.
உதயநிதி அறிவிப்புக்கு அமைச்சர் ஷாஜகான் பதிலளிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் என்பது சர்ச்சையாக பேசப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, 300க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு கார் வழங்கினார். அன்றும் இதே நிதிநிலை தான் இருந்தது. அன்று கேட்காமல், இன்று மட்டும் கேள்வி கேட்கிறார்கள்” என்று கூறினார்.