தமிழக செய்திகள்

“தமிழ்நாட்டின் இதயங்களில் நீங்கள் என்றும்..” - தோனிக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

ராஞ்சியில் அவர் பிறந்திருக்கலாம், ஆனால் சென்னை என்றென்றும் அவரது இல்லமாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் இதயங்களில் நீங்கள் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பீர்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சில ஜாம்பவான்கள் விளையாட்டை விடப் பெரியவர்கள். எம்.எஸ்.தோனி அத்தகைய ஒரு ஜாம்பவான்.

அவர் ஒரு கிரிக்கெட் வீரராக சென்னைக்கு வந்தார், ஆனால் தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளையாகவும், சென்னையின் பெருமையாகவும், கோடிக்கணக்கானோர் பகிர்ந்துகொள்ளும் ஓர் உணர்வாகவும் ஆனார்.

சேப்பாக்கத்தின் ‘அன்பு கோட்டை’ மைதானத்தின் ஆரவாரம் முதல் மஞ்சள் நிறத்தில் திரளும் ரசிகர்கள் கூட்டம் வரை, அவர் இந்த நகரத்திற்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளைக் கொடுத்துள்ளார்.

ராஞ்சியில் அவர் பிறந்திருக்கலாம், ஆனால் சென்னை என்றென்றும் அவரது இல்லமாக இருக்கும்.

மஹி, நீங்கள் ஒரு வீரராக ஐ.பி.எல்.-ல் இருந்து விடைபெறலாம், ஆனால் நீங்கள் என்றென்றும் தமிழ்நாட்டின் இதயங்களில் நிலைத்திருப்பீர்கள்.

அணியின் வழிகாட்டியாக உங்கள் புதிய பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம். நீங்கள் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மேலும் பல நினைவுகளை உருவாக்க வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT