அஜிஸ்கான் 
தமிழக செய்திகள்

கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு... விழுப்புரம் அருகே சோகம்

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (வயது 40). அவர் இன்று (புதன்கிழமை) தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டின் நடுவே அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

மாரடைப்பால் உயிரிழப்பு

பதற்றமடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அஜிஸ்கான் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் அஜிஸ்கான் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.