சேலம்,
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கருங்குள்ளன் வட்டம் பகுதியை சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (வயது 23), பட்டதாரியான இவருக்கும், பக்கத்து ஊரான கன்னியாம்பட்டி பகுதியை சேர்ந்த அம்மாசி (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே கோகிலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதற்கு அம்மாசி தான் காரணம் என்று கோகிலா தரப்பில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அம்மாசியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோகிலாவை அவருடன் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கோகிலா கொலை செய்யப்பட்டு உடலை மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டு இருந்தது. இதனை கைப்பற்றிய கொங்கணாபுரம் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் அம்மாசியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கோகிலாவை கொலை செய்தது அம்மாசி என்பது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய மேல் விசாரணையில், கோகிலாவுடன் குடும்பம் நடத்துவதாக கூறி அம்மாசி அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றதும், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதை வெளியில் சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி கோகிலாவிடம், அம்மாசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அம்மாசி கோகிலாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த கோகிலாவை, அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் கொலையை மறைக்க உடலை சாக்கு மூட்டையில் கட்டி தனது மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு கோகிலா காணாமல் போனதாக கூறி எல்லோரிடமும் நாடகம் ஆடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அம்மாசி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் எடப்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.