திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து, முதிய தம்பதியினரை ஏமாற்றி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற பெண்ணை, புகாரளிக்கப்பட்ட 22 மணி நேரத்திற்குள் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வசந்தம் நகர் பகுதியில் முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று, இவர்களது வீட்டிற்கு இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். தான் குடியிருப்பதற்கு வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருப்பதாக கூறி அந்த தம்பதியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
அவர்களின் நிலையை சாதகமாக்கிக் கொண்ட அந்த பெண், திடீரென மூதாட்டி அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த முதிய தம்பதியினர் உடனடியாக லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியும் துப்பு துலக்கினர்.
போலீசாரின் துரித நடவடிக்கையால், நகையை பறித்துச் சென்ற பெண் லால்குடி அருகே உள்ள மேலவாளை பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 23) என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புகாரளிக்கப்பட்ட 22 மணி நேரத்திற்குள் உமா மகேஸ்வரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்த 7 சவரன் தங்க நகையும் பத்திரமாக மீட்கப்பட்டது.
முதியவர்களைக் குறிவைத்து பகல் நேரத்தில் துணிச்சலாக நடத்தப்பட்ட இந்த திருட்டு சம்பவத்தில், மிக விரைவாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த லால்குடி போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.