சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீதிக்குடி கிராமம் செங்கமேட்டு தெருவில் வசித்து வருபவர் கார்த்தி. இவரது மனைவி காமாட்சி (வயது 28) இவருக்கும் அதே ஊரை சேர்ந்த மகேந்திரனுக்கும் (வயது 64) பணம் கொடுக்கல் வாங்கலில் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மகேந்திரன் ஒரு மாதத்திற்கு முன்பு காமாட்சியை காட்டு மன்னார் கோவிலுக்கு வர சொல்லி உல்லாசத்திற்கு அழைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காமாட்சி மகேந்திரனை செருப்பால் அடித்து வீடியோ எடுத்து அதனை மகேந்திரனின் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோவை காமாட்சி வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் இன்று காலை 7 மணி அளவில் காமாட்சி வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அவரை கட்டையால் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த காமாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் ஆத்திரம் தீராத மகேந்திரன் அருகில் இருந்த காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் கட்டையால் அடித்ததாகவும் தெரிகிறது.
அதில் அவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காமாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். உல்லாசத்துக்கு வர மறுத்த இளம்பெண்ணை முதியவர் அடித்து கொன்ற சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.