தமிழக செய்திகள்

திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை

மதுபோதையில் ஜெயலட்சுமியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் குடும்ப தகராறு காரணமாக 2-வது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுபோதை

மதுரையைச் சேர்ந்தவர் அஜித்குமார். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஜெயலட்சுமி (29) என்பவரை மறுமணம் செய்துகொண்டார். ஜெயலட்சுமிக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.

திருமணத்துக்கு பிறகு அஜித்குமார், ஜெயலட்சுமி மற்றும் முதல் மனைவிக்கு பிறந்த 2 மகன்களுடன் ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையே, முதல் மனைவியின் மகன்களால் அஜித்குமாருக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜித்குமார் மதுபோதையில் ஜெயலட்சுமியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

தற்கொலை

இந்த நிலையில், மனவேதனையில் இருந்த ஜெயலட்சுமி, இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT