திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (37 வயது). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோபியா (27 வயது). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ (5 வயது), தன்னயா ஸ்ரீ (2 வயது) என்கிற 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சோபியா கோபித்து கொண்டு, தனது பெற்றோர் வீடான மூலனூர் ராக்கியாவலசு எம்.ஜி.ஆர். நகருக்கு சென்று விடுவார். பின்னர் அவரை சமாதானம் செய்து கணவன் அழைத்து வந்து குடும்பம் நடத்துவது வழக்கமாகும்.
இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த சோபியா வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குமரேசன், கதவை தட்டி திறக்குமாறு கூறினார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த குமரேசன் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தார். அப்போது வீட்டுக்குள் சோபியா தூக்கில் தொங்குவது தெரியவந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று சோபியாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சோபியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குடும்பத்தகராறில் குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.