கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமம் வெள்ளை பிச்சம்பட்டியைச் சேர்ந்த சரவணனின் மகள் உஷாபிரியா (21 வயது). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி (28 வயது) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் உஷாபிரியா தனது தாய் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் அவர் தோட்டத்தில் இருந்த அரளி விதையை (விஷம்) தின்றதாக கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார், உஷாபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.