ராஜேஸ்வரி- தீபக்  
தமிழக செய்திகள்

திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தற்கொலை – கணவர் கைது

கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஸ்வரி, கடந்த (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்,

தாம்பரம் அடுத்த படப்பை அருகே திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவரை மணிமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

காதல் திருமணம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 27). இவரும் தாம்பரம் அடுத்த படப்பை அழகூர் பகுதியைச் சேர்ந்த தீபக் (வயது 27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

குடும்பத் தகராறு

திருமணத்திற்குப் பிறகு அழகூர் பகுதியில் உள்ள தீபக்கின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். திருமணத்திற்குப் பிறகு ராஜேஸ்வரியின் செல்போன் பயன்பாடு, அவர் யாருடன் பேசுகிறார் போன்ற விபரங்களை தீபக் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார். ராஜேஸ்வரியின் செல்போனை அடிக்கடி வாங்கி ஆய்வு செய்த தீபக், அவர் மீது தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி, தினமும் கடுமையான வார்த்தைகளால் பேசி மனரீதியாகப் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஸ்வரி, கடந்த (ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் நடவடிக்கை- கைது

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணிமங்கலம் போலீசார், ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரியின் செல்போன் உரையாடல்கள் மற்றும் அவர்களுக்கிடையே நடந்த தகராறுகளை அடிப்படையாகக் கொண்டு, மணிமங்கலம் போலீசார் தீபக் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் மனரீதியான கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், வரதட்சணை கொடுமை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT