தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் அபிசெல்வி (வயது 19). இளம் பெண்ணுக்கும் சேலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த இளம்பெண்ணின் சகோதரன் சிவஞானம் மற்றும் தாயார் கண்டித்தனர். ஆனால் அபிசெல்வி, அந்த வாலிபருடனான காதலை கைவிடவில்லை. இதுதொடர்பாக நேற்று மாலை சிவஞானம் மீண்டும் அபிசெல்வியை கண்டித்தார். இதனால் மனமுடைந்த அபிசெல்வி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷப்பொடியை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு, மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலைக்கு சென்றிருந்த தாயார் திரும்பி வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார். இதுகுறித்து தகவலறிந்ததும் கயத்தாறு போலீசார் விரைந்து வந்து அபிசெல்வியின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் காதலித்து வந்த வாலிபர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனால் அபிசெல்வியின் காதலுக்கு பலமுறை குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அபிசெல்வி தனது காதலை கைவிடாமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் அண்ணன் சிவஞானம் அவரை ஆணவக்கொலை செய்துள்ளார். இதுயாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக தனது தங்கை தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவஞானத்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கொலைக்கு உடந்தையாக அவரது தாய் எஸ்தர் பாலினையும் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.