தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின் (வயது 37). இந்த தம்பதிக்கு சிவஞானம்(20) என்ற மகனும், அபிசெல்வி(19) என்ற மகளும் உள்ளனர். அபிசெல்விக்கும், சேலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு இதையறிந்த அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் தாயார் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த அபிசெல்வி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பினார். இருப்பினும் அபிசெல்வி தனது குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி இன்ஸ்டாகிராம் வாலிபருடன் காதலை தொடர்ந்து வந்தார். இதனால் அபிசெல்வியை, அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கண்டித்து வந்தனர். நேற்று முன்தினம் இதுதொடர்பாக அபிசெல்வியை அவரது அண்ணன் சிவஞானம் மற்றும் தாயார் எஸ்தர் பாலின் ஆகியோர் கடுமையாக கண்டித்தனர். மனமுடைந்த அபிசெல்வி வீட்டில் இருந்த விஷப்பொடியை தண்ணீரில் கலக்கி குடித்துவிட்டு. மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் கயத்தாறு போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில், இந்த சம்பவத்தை தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் பரபரப்பு தகவல் வெளியானது. அதில், அபிசெல்வியின் உடலில் சில இடங்களில் பலத்த காயங்கள் இருந்ததும், அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்ததும் உறுதியானது. இதனடிப்படையில், அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம், தாயார் எஸ்தர் பாலின் ஆகியோரை போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில், அபிசெல்வியை, சிவஞானம் கட்டையால் அடித்து படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கு எஸ்தர் பாலின் உடந்தையாக இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து தற்கொலை வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றியமைத்து சிவஞானம், எஸ்தர் பாலினை அதிரடியாக கைது செய்தனர்.