சென்னை,
சென்னையில் குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த 35 வயது இளம்பெண், பழவந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் கண்ணாடியகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வேலை பார்க்கும் கண்ணாடியகத்துக்கு வந்து சென்ற நங்கநல்லூர் நேரு காலனி 9-வது தெருவைச் சேர்ந்த வினோத்குமார்(35) என்பவருடன் அந்த இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற வினோத்குமார், அங்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அடுத்த நாள் அந்த இளம்பெண்ணிடம், உனது குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், கணவர் கட்டிய தாலியை கழற்றி எறியும்படியும் மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில், பரங்கிமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வினோத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.