தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள தேங்காய் மரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 31). இவர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவன ஊழியர். இவர், நகைக்கடையில் பணிபுரிந்து வரும் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் சின்னசாமியின் காதலை ஏற்கவில்லை. மேலும் அவருடன் பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு தர்மபுரியில் உள்ள நகைக்கடையில் பணியை முடித்து கிளம்பிய அந்த பெண், தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து ஓட முயன்றார். இதனால் பஸ் நிலையத்தில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சின்னசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அந்த பெண்ணை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.